search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில என்ஜினீயர்"

    சென்னை திருவான்மியூரில் போதை மாத்திரை, போதை பவுடர் விற்ற வடமாநில என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
    அடையாறு:

    சென்னை திருவான்மியூரில் போதை மாத்திரை, போதை பவுடர் விற்ற வடமாநில என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் ஆன்லைனில் வெளிநாட்டில் இருந்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில பண்ணை வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை மாத்திரை, போதை பவுடர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சாப்ட்வேர் என்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இரு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர் அதிக அளவில் போதை மாத்திரை உட்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது வெளிநாட்டு போதை மாத்திரையை ஆன்லைனில் வாங்கி உபயோகித்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து போதைப்பொருள் விற்பவர்களை பொறிவைத்து பிடிக்க அடையாறு துணை கமிஷனர் செஷாய் சாய் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் சுப்பராயன், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீல், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசுந்தரம், மனோஜ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. வாடிக்கையாளர் போல் குறிப்பிட்ட அந்த ஆன்லைனில் போதைப்பொருளுக்கு தனிப்படை போலீசார் ஆர்டர் கொடுத்தனர்.

    சில நாட்களில் வாடிக்கையாளர் என நினைத்து தனிப்படை போலீஸ்காரரை அந்த ஆன்லைனில் இருந்து தொடர்பு கொண்டவர் போதைப்பொருளை திருவான்மியூரில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார். அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் திருவான்மியூர் ராஜாஜி நகர் சென்று அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே போதைப்பொருளுடன் நின்று இருந்த வடமாநில வாலிபரை சுற்றி வளைத்தனர்.

    விசாரணையில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நிகில் திவாரி (வயது 32) என தெரியவந்தது. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், நிகில் திவாரி, திருவான்மியூர் பகுதியில் 5 மாதத்துக்கும் மேலாக தங்கி இருந்து போதை மாத்திரைகள், போதை பவுடர் மற்றும் வாயில் வைத்ததும் கரையும் பேப்பர் போன்ற போதைப்பொருட்களை சென்னையில் பல்வேறு இடங்களில் விற்று வந்துள்ளார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் போதை பழக்கத்தால் வேலையை இழந்தார். இதனால் ஆன்லைனில் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி சென்னையில் விற்று வந்தது தெரிந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் பையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 
    ×